Tamil Proverbs (தமிழ் பழமொழிகள்)

ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
விளக்கம்:  ஊர் மக்களின் அந்தரங்க அவலங்கள் எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும்.

Posted by: TamilPedia
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
விளக்கம்: அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

Posted by: TamilPedia
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
விளக்கம்: அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

Posted by: TamilPedia
வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
விளக்கம்: எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.

Posted by: TamilPedia
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
விளக்கம்: ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.

Posted by: TamilPedia
ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
விளக்கம்: கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).

Posted by: TamilPedia
ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
விளக்கம்: ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

Posted by: TamilPedia
கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
விளக்கம்: ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.

Posted by: TamilPedia
வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
விளக்கம்: ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

Posted by: TamilPedia
இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?
விளக்கம்: இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை?

Posted by: TamilPedia
இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.
விளக்கம்: ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

Posted by: TamilPedia
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
விளக்கம்: நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

Posted by: TamilPedia
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
விளக்கம்: கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

Posted by: TamilPedia
புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
விளக்கம்: வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது.

Posted by: TamilPedia
அப்பியாசம் கூசா வித்தை.
விளக்கம்: அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும். 

Posted by: TamilPedia
எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
விளக்கம்: எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

Posted by: TamilPedia
பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
விளக்கம்: வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

Posted by: TamilPedia
அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
விளக்கம்: ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

Posted by: TamilPedia
உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
விளக்கம்:  உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும். 

Posted by: TamilPedia
வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
விளக்கம்: வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

Posted by: TamilPedia
ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
விளக்கம்: தற்புகழ்ச்சியின் உச்சி இது.

Posted by: TamilPedia
துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
விளக்கம்: குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.

Posted by: TamilPedia
பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
விளக்கம்: பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.

Posted by: TamilPedia
ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
விளக்கம்: ஆண்டி ஒருவனுக்கு உணவிடும்போது அது அவனுக்காகவா? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா?

Posted by: TamilPedia
சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
விளக்கம்: இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

Posted by: TamilPedia

Disclaimer
TamilPedia.Net is completely entertainment based website. We are giving tamil service like thirukkural, tamil quotes, tamil stories, baby names, tamil proverbs and more useful services.
Read More...